சாதனைப் பெண்கள்

சாதனைப் பெண்கள்:ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி!

நன்றி கூடல் - Tuesday, March 08, 2011
Women's Day Special:  Sujitha, a visually impaired girl clears IAS examination - Women Secrets of Success
திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார். 10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். கடந்த வாரம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துகள் குவியத் துவங்கியுள்ளன.
வெற்றியைக் குறித்து சுஜிதா கூறியதாவது:-
இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித்தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள, "ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்" என்ற குறளின் கருத்துப்படி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன். இவ்வாறு மாணவி சுஜிதா கூறினார்.



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



சாதனைப் பெண்கள்:கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதே இலட்சியம் - ஜெனித்தா ஆன்டோ

கூடல் - Monday, October 25, 2010
Chess Champion Jenitha Anto says that she will win 'Grand Master title' - Women Secrets of Success
சதுரங்க ஆட்டத்தில் ராணிக்குத்தான் 'பவர்' அதிகம் என்பதை நிரூபிக்கும் ராணியாக இருக்கிறார் ஜெனித்தா ஆன்டோ. இவரின் காய் நகர்த்தல்களுக்குத் திணறாத வீரர்களே இல்லை எனலாம். தேசிய மற்றும் உலக அளவிலான சதுரங்கப் போட்டிகளில் தொடர்ச்சியாய் பதக்கங்கள் வென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இந்தச் சதுரங்க சாம்பியன் ரஷ்யாவில் நடக்கவுள்ள 39-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காகப் பயிற்சி பெற்றுவரும் அவரைச் சந்தித்தோம். இனி அவருடனான உரையாடல்...
"திருச்சி சேக்ரெட் ஹார்ட் பிரைமரி பள்ளியில் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போது, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியரான என் தந்தை காணிக்கை இருதயராஜ் 'வில் ஆஃப் ஸ்டீல்' என்ற ஆங்கில பாடத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பாடத்தில், கிரிக்கெட் வீரரான பட்டோடி பற்றி சொல்லப்பட்டிருந்தது. ஒரு கண்ணின் பார்வையைக் கொண்டு அவர் கிரிக்கெட்டில் உலகளவில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியதைக் கேள்விப்பட்டதும், எனக்கும் அவரைப்போல, விளையாட்டில் எதாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றியது. மூன்றாவது வயதிலேயே போலியோ நோயால் தாக்கப்பட்டு கால்கள் செயலிழந்து போனதால், சதுரங்கத்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என் அப்பா பயிற்சியளித்தார். முதன்முதலில் 1995-ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் பங்கேற்றேன். இந்தப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
அதன்பிறகு 1997-ம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று நான்காம் இடத்தைப் பெற்றேன். ராஜா ரவிசேகர் என்பவரிடம் பயிற்சி பெற்று, பாரத் ஹெவி எலக்ட்ரிக் கம்பெனி வளாகத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப்போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றேன். 2007-ம் ஆண்டு போலந்து நாட்டின் விஸ்லா நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றேன். இந்த இரண்டு போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற சதுரங்கப் போட்டிகள். ஜெர்மனியில் நடைபெற்ற 38-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி என்னால் மறக்க முடியாத போட்டி. ஒலிம்பிக்கிற்கு இணையான இந்தப்போட்டி பதினொரு ரவுண்டுகள் நடைபெற்றது. ஏழு சுற்றுகளில் வெற்றி பெற்ற நான் இரண்டு சுற்றுகளில் தோற்றேன். இந்தத் தோல்வி மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தேன். தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக நான் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்றதால், இதனை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, இருபத்தைந்து ஷீல்டுகளும், எட்டு மெடல்களும் வாங்கியுள்ளேன்.
தற்போது ரஷ்யாவில் நடக்க இருக்கும் முப்பத்தொன்பதாவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், விளையாட உள்ளேன். இதற்காக, ரஷ்யாவில் செயல்பட்டு வரும் இண்டர்நேஷனல் ஃபிஸிக்கலி சேலன்ஞ்ட் செஸ் அசோசியேஷன் அமைப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் ஐந்து வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். இவர்களில் ஒருவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். ஆனால் அணிக்கு தலைமை தாங்குவார். இவரை நாங்கள் ஃபிளேயிங் காப்டன் என்று அழைப்போம். தற்போது நான் இடம்பெற்றுள்ள அணியில், சைகினா நாடிஹடா, கைடானோவிச் மரினா, மெல்னிக் கலினா, அப்கிசேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அப்கிசேவ் எங்கள் அணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எங்களை வழிநடத்திச் செல்வார். ஆனால் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இந்தப் போட்டியில் நான் இரண்டாவது போர்டில் விளையாட உள்ளேன். அதாவது நான்கு பேரில் இரண்டாவதாக நான் விளையாடுவேன். இதில் டைம் கண்ட்ரோல் முக்கியம். எவ்வளவு சீக்கிரம் எதிராளியை வீழ்த்துகிறோமோ அவ்வளவு புள்ளிகள் கிடைக்கும். இதற்காக நான் சீனிவாச ராவ் என்ற பயிற்சியாளரிடம் தற்போது பயிற்சி பெற்று வருகிறேன். காலையில் மூன்று மணி நேரமும் மாலையில் மூன்று மணி நேரமும் பயிற்சி செய்கிறேன். கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களைப் போல செஸ்ஸூம் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றது. அதிபன் போன்ற இளம் வீரர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராபர்ட் ஃபிஷர் எனக்கு மிகவும் பிடித்த செஸ் வீரர். இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்த் பிடித்த செஸ் வீரர். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும். மேலும், சார்ட்டட் அக்கவுண்ட் படிக்க வேண்டும்", என்றார் அந்த இளம் வீராங்கனை.



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx