நலம் அறிய ஆவல்!

வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள்!

மல்லிகா பத்ரிநாத் - 27 January, 2011
Give Your Stomach a Rest - Food Habits and Nutrition Guide in Tamil பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயதுலயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். சாப்பிடற உணவு ஜீரணிக்கப்பட்ட பிறகு, சிறுகுடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங்குடலுக்குத் தள்ளப்படுது. சில சமயத்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ்சப்படாம, அப்படியே பெருங் குடலுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்துதான் வயிற்றுப்போக்கை உண்டாக்குது. வயிற்றுப்போக்குக்கான காரணங்கள் நிறைய....

ஊரு விட்டு ஊரு, இல்லைனா நாடு விட்டு நாடு போறவங்களுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமைக்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுப்போக்குக்கு இன்ஃபெக்ஷனோ, பால் அலர்ஜியோ காரணமா இருக்கலாம். குழந்தைகளுக்கு பேதியாகிறப்ப அலட்சியம் கூடாது. 2-3 தடவை போனாலே என்னனு கவனிக்கணும்.

வயித்தைக் காயப் போட்டாலே இந்தப் பிரச்சினை சரியாயிடும்ங்கிறது பலரோட நம்பிக்கை. அது ரொம்ப தப்பு. வயித்துக்கு ஓய்வே கொடுக்கக் கூடாது. ரத்தம் கெட்டியாகிறது, உடம்புல உள்ள நீர்ச்சத்தெல்லாம் வறண்டு போகிறது, மயக்கம்னு அதோட பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.
வயிற்றுக்போக்கை அதிகப்படுத்தற உணவுகள்னு சிலதைச் சொல்லலாம். பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், சுண்டல், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால், ஜூஸ், பாட்டில் பானங்கள், காபி இதெல்லாம் அந்த ரகம்.

பேதியைக் கட்டுப்படுத்தற உணவுகள்னு பார்த்தா அரிசி, நெய் ஜவ்வரிசி,
ஆரோரூட்ல செய்த கஞ்சி, வெந்தயம், நீர்மோர், கேரட், உருளைக்கிழங்குன்னு நிறைய இருக்கு.

வயிற்றுப்போக்கு வந்தவங்க, அதிக நார்ச்சத்து உணவுகளைத் தவிர்க்கணும். அரிசி நொய், ஜவ்வரிசி, ஆரோரூட் மாவுல தளர்வா, கொஞ்சமா உப்பு சேர்த்த கஞ்சியை அடிக்கடி கொஞ்சமா, ஒவ்வொரு டீஸ்பூனா ஒரு நிமிஷம் எடுத்து விழுங்கறது நல்லது. காபி குடிக்கிறது உடம்புல உள்ள நீர்ச்சத்தை அழிச்சிடும். ஓரளவு கெட்டியான சூப் குடிக்கலாம். பெரியவங்களுக்கு பேதியானா, நீர்மோர்ல வெந்தயப் பொடி சேர்த்துக் குடிக்கலாம்.

தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கும் பேதியாகலாம். அதுக்காக தாய்ப்பால் கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. பவுடர் பால் கொடுக்கிற குழந்தைகளுக்கு, அதை மாத்தின உடனே, சரியா ஜீரணமாகாம போகலாம். குழந்தையோட உடல்வாகு, அதோட செரிமானத் திறன் எல்லாம் பார்த்து, டாக்டரோட அட்வைஸ் படி புது உணவை ஆரம்பிக்கிறது நல்லது. கஞ்சியா இருந்தா, குழந்தைகளுக்கு வடிகட்டியும், பெரியவங்களுக்கு அப்படியேவும் கொடுக்கலாம்.

ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ் நல்லது. மத்தபடி ஆப்பிள், பேரிக்காய், பச்சை திராட்சை தவிர்க்கப்படணும். சாக்லெட் கூடாது. அதுல உள்ள 'சார்பிட்டால்' என்ற செயற்கை இனிப்பு, பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தும். அதிக இனிப்பு, அதிக உப்பு ரெண்டுமே தவிர்க்கப்படணும்.



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!

கூடல் - 19 February, 2011
Nature's Gift: Vegetables Good for Health - Food Habits and Nutrition Guide in Tamil

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.
நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.
இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.