Monday, June 20, 2011

FIESTA CAHAYA 2011 SMKTD2


Program Fiesta Cahaya 2011 berjaya dijalankan secara meriah dengan kerjasama semua warga sekolah SMK Taman Daya 2. Program ini mendapat sambutan yang hebat di kalangan para pelajar daripada pelbagai latarbelakang dan turut mendapat sokongan dan kerjasama daripada ibu bapa pelajar. 
Program ini diadakan pada 26 hingga 28 Mei 2011.Pelbagai pertandingan diadakan seperti Pertandingan Ponggal, Pertandingan Talaenttime, Pertandingan Kolam, ‘Best Costume of the Day’, ‘Most Cooperative Student’ dan ‘Most Helpful Student’.
Berikut adalah aktiviti-aktiviti sepanjang program.
 







பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?

சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், “என்னப்பா விஷயம்..?” என்று கேட்டார்.
“சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.
இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படிம் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.
“சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், “அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்” என்றார்.
அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.
2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
“சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது…” என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.
அப்போது விவேகானந்தர் சொன்னார்…
“உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே… அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே… அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்…” என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.
ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கபடும் முக்கியத் துவம் – அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.
பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது… என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதிக்க படுகின்றன.

இப்படி கட்டுபாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.
உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!
ஒருமுறை புத்தரின் சீடன் ஒருவன் வறியவன் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
நேராக புத்தரிடம் சென்றான். “குருவே! தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையானவனிடம் உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை…” என்று கூறி குறைபட்டுக் கொண்டான்.
அதற்கு புத்தர் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த ஏழ்மையானவனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார்.
மறுநாள் அந்த ஏழ்மையானவனோடு புத்தரிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் புத்தர். பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ளச் செய்த புத்தர், இனி  வீட்டுக்குச் செல் என்றார்.
புத்தரின் சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று எணினான்.
அப்போது புத்தர் சொன்னார்…
“இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்” என்றார்.
புத்தர் ஒரு ஆணாக இருந்தாலும் கூட, ஒரு தாய்மைக்கே உரிய பொறுமையான பக்குவத்தோடுதான் உபதேசங்கள் செய்தார். அதனால்தான் அவரது அறிவுரைகளை மக்கள் கேட்டார்கள். அதன்வழி நடந்தார்கள்.
ஆனால், ஆண்களில் பெரும்பாலானோர், பசிக்கு வருந்தியவனிடம் உபதேசம் செய்து கோபப்பட்ட சீடனாகவே இருக்கிறார்கள்.
மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாலும் பெண்களை நாம் போற்றுகிறோம். இதில் விதிவிலக்காக சில பெண்களும் உண்டு. அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.
இந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான்? குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்!). ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள். எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்’ என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படு கிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும் என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மன தளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் கூட, ஆண் தனக்கு பிடித்த சினிமாவைக் காணவே மனைவியையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்கிறான். இந்த விஷயத்தில் மனைவியின் கருத்தைக் கேட்பது தனக்கு அவமானம் என்று கருதுகிறான் அவன். வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் – தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான். வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.
- இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை!

Monday, March 14, 2011

ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்!

Astonishing Era and few questions on Emperor Raja Raja Chozhan - Tamil Literature Ilakkiyam Papers

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!

Relationship between Tamil and Indus Valley Civilization - Tamil Literature Ilakkiyam Papers உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், "பழங்கதை பேசுவதால் என்ன பயன்?" என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.

கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.

இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.

டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் "விடுபட்ட இணைப்பு" என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.

சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.

"சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்" என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை "இந்து மதத்தோடு" தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.

கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.

துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
"இருங்கோவேளே... என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.

யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!"
- இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
"நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்ற வரியில் தொடங்குகிறது.
"வடபால் முனிவன்" யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது "பெரும் மண் பாண்டத்தில் தோன்றி" என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, 'ஓமகுண்டத்தில்' என்று தவறாகப் பொருள் கூறினர். 'தட' என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் 'தட' என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.

துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.

கண்ணன் தமிழன்

நச்சினார்க்கினியரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.
அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், "வடபால் முனிவர் தடவினுள் தோன்றி" என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை 'தாச யாதவன்' என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!

கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.
"கண்ணன் கருப்பு நிறத்தவன் தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தத் ஆரியர் தலைவன் இந்திரன்" ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.

அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).
அகத்தியரோடு தொடர்புடைய 'தட' குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.
அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.

மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும் என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.

ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, "நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.
இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.

அழிந்த நகரங்கள்

இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்
"உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு" என்கிறார் கபிலர். (புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு. கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)
இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் "நீடுநிலை அரையத்துக் கேடு" என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.

மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.

வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்€ல் அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.

சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, 'தாச யாதவன்' என்கின்றன.

கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் "துவரை" என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.

தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் "அகத்தியம்" என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். "அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்" என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.

பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.

சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.
முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, "இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்" என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.

நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்

தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் திருநாள்!



உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல்.
மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா தைப்பொங்கல். தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"பொங்கல் பண்டிகை" என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
பொங்கல் என்பதற்கு "பொங்கி வழிதல்", "பொங்குதல்" என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம்.
பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில் வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் தனித்தனியே செய்து, சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.
இயற்கை வளத்தால், மும்மாரி மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் பெருகும். காடு, கழனி நனையும். சூரிய வெளிச்சம் பட்டால்தான் பயிர் வளர்ச்சியடைந்து சாகுபடி சிறக்கும்.
விளைந்த பயிரை அறுவடை செய்து தானியமாக்குவதற்கு தொழிலாளர்கள் உதவுகிறார்கள். பயிர் நடுவதற்கு ஏதுவாக உழவுக்கும், அறுவடைக்குப் பின் போரடிப்பதற்கும், விளைந்த தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும் கால்நடைகள் பெரிதும் உதவுகின்றன. எனவே தான் விவசாயத் தொழிலாளர்களை வீடுகளுக்கு அழைத்து, சூரியனுக்குப் படைத்த பொங்கல் உள்ளிட்டவற்றை அளித்து வயிறாரச் சாப்பிடச் செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான வேட்டி, துண்டு, சேலை உள்ளிட்ட துணிகளையும் வழங்கி கவுரவிக்கிறோம்.
துணி-மணிகளுடன் சிறிய தொகை ஒன்றை பொங்கல்படியாக அளிக்கும் வழக்கமும் உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், வயதில் சிறியவர்களுக்கும் பெரியவர்கள் பொங்கல்படி அளிப்பார்கள்.
பொங்கல்படி வாங்குவதற்கென்றே உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் வழக்கமும் இருந்துள்ளது.
பொங்கல்படி எனும் சிறிய தொகையை விடவும், பொங்கள் திருநாளில் உறவினர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, பேசிக் கொள்வதுடன் நீண்ட காலம் பார்க்காமல் இருப்பவர்களும் சந்திக்க ஏதுவாகிறது. இதனால் உறவினர்களுக்கு இடையேயான உறவும் வலுப்படும்.
"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்பதற்கேற்ப ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும் எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து படைத்து, அவற்றுக்கும் அளித்து, நாமும் உண்டு மகிழ்கிறோம். இதற்காகவே மாட்டுப் பொங்கல் என தனியாக ஒரு நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்.
மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, சிங்காரித்து அவற்றின் கழுத்தில், உரிமையாளரின் வசதிக்கேற்ப கரும்பு முதல் தங்கக்காசு வரை கட்டி சாலைகளில் ஓட விடுவதும் மாட்டுப் பொங்கலின் சிறப்பாக அமைகிறது. துள்ளித்திரிந்து ஓடிவரும் மாடுகளைப் பிடிக்கும் கட்டிளங்காளைகளாக விடலைகளும், விடலைகளை வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் மகிழ்ச்சி பூரிப்பில் திளைப்பதும் தைப் பொங்கல் முடிந்த மறுநாளில் தான்.
தமிழர் திருநாளாம் பொங்கலை இன்றளவும் கொண்டாடுவதில் இருந்தே பண்டைய காலத்தில், வாழ்ந்த தமிழக மக்களின் தொன்மைச் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தற்கால இளைய சமுதாயத்தினருக்கும், பல்கிப் பெருகிவிட்ட பெருநகர வாழ்மக்களுக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் தைப் பொங்கல் விளங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
"பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்பதற்கேற்ப, குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில், வீடுகளில் உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) பொங்கலுக்கு முன்தினம் போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கமும் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது என்பதை அறிகிறோம். இதனால், மட்பாண்டங்களைச் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைப்பதுடன், வீடுகளிலும் புதிய பானைகளுடன் கூடிய நிலை உருவாகி, மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும். பொதுவாகவே மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனியான சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ரசித்தவர்கள் அறிய முடியும்.
தவிர, அதுவரை நிலவிய, பழைய விரும்பத்தகாத சம்பவங்கள் - சங்கடங்கள் எல்லாம் தொலைந்து, புதிய ஆண்டில் - தைத்திங்கள் முதற்கொண்டு அனைத்தும் புதியவையாக - நல்லவையாக நிகழட்டும். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் வரும் புத்தாண்டில் நிகழாமல், பொங்கிவரும் பால் போன்று, சர்க்கரைப் பொங்கலின் இனிப்பான சுவையைப் போன்று இருக்கட்டும் என்பதே பாரம்பரிய தத்துவமாகக் கருதப்படுகிறது.
தற்போதைய தகவல்-தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த தங்களின் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து, வழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும் விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்துள்ளதை அறிகிறோம். தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகையை காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் பிரத்யேக கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.
பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதான முதியவர்கள் - அதாவது தாத்தா-பாட்டி தொடங்கி கைக்குழந்தைகள் வரை ஒரே ஊரில் - ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டு, பொங்கலைக் கொண்டாடுவதை இன்றளவும் காண முடிகிறது. ஆனால், இன்று கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து, மைக்ரோ குடும்பங்கள் (கணவன் - மனைவி, ஒரு குழந்தை அல்லது இரண்டு) பெருகிவிட்ட நிலையில், இன்றைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையை ஏதாவது தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தால் மட்டுமே அந்தப் பண்டிகையின் அருஞ்சிறப்பு தெரிய வரும்.
அதிலும், அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரகதியாகி விட்டன. மாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி இன்று டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது எனலாம்.
அதிவேகமாக வளரும் காலத்திற்கு ஏற்ப விவசாய நிலங்களும், காடு-கழனிகளும் மருகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிறு நகரங்கள் தொடங்கி, பெருநகரங்கள் வரை தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கொடுத்தது போக எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த தைப் புத்தாண்டில் ஏற்போமாக.
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் உள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க மாட்டோம் என்ற உறுதியையும் ஏற்பதுடன், முந்தைய பசுமையான பொங்கல் நினைவுகளையும், மூதாதையர்களையும் மனதில் எண்ணி பொங்கலைக் கொண்டாடுவோமாக.
பொங்கட்டும் பொங்கல், தமிழர்களின் உள்ளத்தைப் போல்!